பொங்கலைக் கொண்டாட சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட மக்கள்..! பேருந்து- ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரிப்பு

பொங்கலைக் கொண்டாட சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட மக்கள்..! பேருந்து- ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரிப்பு

தொடர் விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் சென்றதால் சென்னையில் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

பொங்கல் பண்டிகையையொட்டி, அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச்சென்றனர். 6 இடங்களில் இருந்து பேருந்துகள் புறப்பட்டதால் பயணிகள் சிரமமின்றி செல்ல முடிந்தது.

அரசுத் தரப்பிலேயே ஏ.சி. மற்றும் ஸ்லீப்பர் பேருந்துகள் விடப்படுவதாலும் கட்டணம் குறைவாக இருப்பதாலும், எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லை என தனியார் பேருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் மற்றும் கார்களில் ஏராளமானோர் புறப்பட்டதால், சோழிங்கநல்லூர், பெருங்களத்தூர் ஆகிய இடங்களில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. பெருங்களத்தூரில் இருந்து புறவழிச்சாலை வழியில் நெரிசல் ஏற்பட்டு, சென்னைக்கு வரும் வாகனங்கள் போரூர் சுங்கசாவடி அருகில் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் நேற்று கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பொங்கலையொட்டி சுவிதா ரயில்கள் உட்பட 33 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு மார்க்கங்களில் செல்லும் ரயில்களில் ஏராளமான பயணிகள் புறப்பட்டுச் சென்றனர்.

வெளியூர் செல்லும் பயணிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள் தொடர்பான காவல்துறை மற்றும் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், போக்குவரத்து அதிகாரிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இந்நிலையில், குற்றச் சம்பவங்களைத் தடுக்க கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிக எண்ணிக்கையிலான போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *