பட்டப்பகலில் கிளி ஜோதிடர் அரிவாளால் வெட்டிக்கொலை

திருப்பூரில் பெண்களை வசியம் செய்வதாகக் கூறி கிளி ஜோதிடர் ஒருவர், பட்டப்பகலில் மர்ம நபரால் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை அரங்கேறும் பதைபதைப்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.

திருப்பூர் பென்னி காம்பவுன்ட் பகுதியில் சாலையில் நடந்து செல்லும் ஒருவரை, ஹெல்மெட் அணிந்தபடி பின்தொடர்ந்து வரும் நபர் அரிவாளால் வெட்டுகிறார். இதில் கீழே விழும் அவரை, ஹெல்மெட் அணிந்த நபர் ஆவேசத்துடன் சரமாரியாக வெட்டத் தொடங்குகிறார்.

பின்னர் அங்கிருக்கும் பொதுமக்களை நோக்கி ஏதோ சத்தமாக கூறுகிறார். இதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் அவர் மீண்டும் திரும்பி வந்து, வெட்டப்பட்டு கீழே கிடப்பவரை ஆத்திரத்துடன் அரிவாளால் வெட்டுகிறார். இந்த பதை பதைக்கும் காட்சிகள் அங்கிருந்த வணிக நிறுவனத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன.

பட்டப்பகலில், பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் மிக்க பகுதியில் நடந்த கொடூரமான கொலையால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தகவலறிந்த திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

இதில், கொல்லப்பட்டு கிடந்தது பார்க் ரோட்டில் சாலையோரம் கிளி ஜோதிடம் பார்த்து வந்த ரமேஷ் என்பது தெரியவந்தது. ரமேஷை பின்தொடர்ந்து வந்து வெட்டிக் கொன்ற நபர், தான் நீதிமன்றத்தில் சரணடையப் போவதாக கூறிச் சென்றதாக அங்கிருந்த வணிகர்கள் போலீசிடம் கூறியுள்ளனர்.

மேலும், கொலை செய்த நபர், சிறிது தூரம் சென்றுவிட்டு அச்சடிக்கப்பட்ட காகிதங்களை சாலையில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். அவற்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த காகிதத்தில், கிளி ஜோதிடர் ரமேஷ், பூங்காவுக்கு வரும் பெண்களை வசியப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாகவும், ஏராளமான பெண்கள் ரமேஷின் பிடியில் இருந்ததாகவும் அச்சடிக்கப்பட்டிருந்தது.

மேலும், தனக்கும் ((போயம்பாளையத்தைச் சேர்ந்த மோகனப்பிரியா என்ற )) ஒரு பெண்ணுக்கும் ஏற்பட்ட தவறான பழக்கத்தால் ஒரு குழந்தை உள்ள நிலையில், அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் இருவரும் பிரிக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தன்னிடமிருந்து பிரிக்கப்பட்ட அந்தப் பெண்ணும், கிளி ஜோதிடர் ரமேஷின் பிடியில் சிக்கியிருப்பதாகவும், இதன் பின்னணியில் ஏராளமானோர் இருப்பதாகவும் கொலையாளி வீசிச் சென்ற காகிதத்தில் கூறப் பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, கிளி ஜோதிடர் ரமேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், கொலை குறித்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பட்டப்பகலில் கொடூரமான கொலையை அரங்கேற்றிய அந்த நபரை கைது செய்ய அவர்கள் முயன்று வருகின்றனர். கொலை செய்த நபர், நீதிமன்றத்தில் ஆஜராகப் போவதாகக் கூறிவிட்டுச் சென்றதால், அங்குள்ள நீதிமன்றங்களில் போலீசார் நிறுத்தப் பட்டுள்ளனர்.

மேலும், கொலையாளி வீசிச் சென்ற காகிதத்தில் கூறப்பட்டிருந்த பெண் குறித்து அனுப்பர்பாளையம் காவல் நிலைய போலீசாரிடம், திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் தகவல்களை கேட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *