திருச்சியில் விண்வெளித்துறை ஆய்வுக்கு ஊக்கம் அளிக்க தொழில்நுட்ப ஆதரவு மையம் – இஸ்ரோ தலைவர் சிவன்

விண்வெளித்துறையில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கவும், ஆய்வு மற்றும் புதுமைக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், திருச்சியில் தொழில்நுட்ப ஆதரவு மையம் அமைக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிவன், விண்வெளித்துறையில் இளம் விஞ்ஞானிகளையும், ஆய்வுகளையும் ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் வகுத்துள்ளதாக தெரிவித்தார். இதில் இளம் விஞ்ஞானிகள் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, செயற்கைக்கோள்களை உருவாக்குவதில் ஒருமாத செய்முறை பயிற்சி வழங்கப்படும் என்றார்.

பெரும்பாலும் 8ஆம் வகுப்பு நிலையில் உள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இஸ்ரோவில் நடைபெறும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை அணுக அனுமதிக்கப்படும் என்றும், இதன் மூலம் செயற்கைக்கோள்களை உருவாக்குவதில் செய்முறை அனுபவம் பெற வழிவகுக்கப்படும் என்றும் சிவன் தெரிவித்தார்.

இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் அவர்கள் கலந்துரையாடவும் தேவையானவற்றை தெரிந்துகொள்ளவும் அனுமதிக்கப்படுவதன் மூலம், அறிவியல் அறிவு பெருக வழிவகுக்கப்படும். இதற்கான செலவை இஸ்ரோவே முழுமையாக ஏற்றுக்கொள்ளும் என்று கூறிய சிவன், இந்த திட்டத்திற்கு மாநில அரசுகளும் கல்வி நிறுவனங்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதேபோல, இளம் விஞ்ஞானிகள் செயற்கைக்கோள்களை உருவாக்கும் வகையில், ஆதரவு மையங்கள் உருவாக்கப்படும் என்றும், இந்த ஆய்வகங்களில் இளம் விஞ்ஞானிகள் உருவாக்கும் செயற்கைக்கோள்களை இஸ்ரோவே வாங்கிக் கொள்ளும் எனவும் சிவன் தெரிவித்தார்.

விண்வெளித்துறையில் தொடக்க நிலையில் வளர்ந்து வருபவர்களை ஊக்குவிப்பதற்கான இந்த ஆதரவு மையங்கள் திருச்சி, நாக்பூர், ரூர்கேலா, இந்தூரில் உருவாக்கப்படும் எனவும், ஏற்கெனவே திரிபுராவில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் சிவன் கூறினார்.

பிஎஸ்எல்வி ராக்கெட்டை தொழிற்துறையினர் தயாரிக்கும் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தற்போது பிஎஸ்எல்வி ராக்கெட்டை இஸ்ரோ தயாரித்து, செலுத்தி வரும் நிலையில், முதல்கட்டமாக பிஎஸ்எல்வி ராக்கெட் தயாரிப்பு தொழில்துறையினரிடம் வழங்கப்பட உள்ளது என்றும் சிவன் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *