தாமிரபரணி மகா புஷ்கர விழா தொடங்கியது…. லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடல்.

144 ஆண்டுகளுக்குப் பின் தாமிரபரணி மகா புஷ்கரம் இன்று தொடங்குகிறது. இதையொட்டி தீர்த்தக் கட்டங்கள் மற்றும் படித்துறைகளில் பக்தர்கள் நீராட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் போது அந்த ராசிக்குரிய நதியில் புஷ்கர விழா நடைபெறும். அதன்படி குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததாலும், கிரகங்களின் அமைப்புப் படியும் 144 ஆண்டுகளுக்குப் பின்னர் மகா புஷ்கர விழாவாக தாமிரபரணியில் தற்போது கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானது இன்று தொடங்கி 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு பொதிகை மலையில் உற்பத்தியாகி தூத்துக்குடி புன்னக்காயலில் கடலில் கலக்கும் தாமிரபரணியில், 64 தீர்த்தக்கட்டங்களில் பக்தர்கள் நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நதிக்கரையில் உள்ள 149 படித்துறைகளில் ஆரத்தி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. 12 நாட்களும் அந்தந்த ராசிக்காரர்கள் புனித நீராடுவர். திருநெல்வேலி மாவட்டம் கள்ளிடைக் குறிச்சி, அம்பை, சேரன்மகாதேவி, கோபாலசமுத்திரம், தைப்பூச மண்டபம், சீவலப்பேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது.

மகாபுஷ்கர விழாவில் பங்கேற்க துறவியர்கள், ஜீயர்கள் வருகை புரிகின்றனர். அகில பாரத துறவியர் சங்கம் தொடங்கியுள்ள மகாபுஷ்கர விழாவில் பங்கேற்பதற்காக இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாபநாசம் வருகிறார். மகாபுஷ்கரத்தை முன்னிட்டு வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 500 போலீசாரும், 500 ஊர் காவல் படையினரும், தீயணைப்பு துறையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *