பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்குகின்றன.
இன்று தொடங்கி வரும் 29-ஆம் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெறுகின்றன. 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 மாணவ -மாணவியர், 38 ஆயிரத்து 176 தனித் தேர்வர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதவுள்ளனர்.
மொழிப்பாடத் தேர்வுகள் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 4.45 மணி வரை நடைபெற உள்ளன. கணிதம் உள்ளிட்ட மற்ற பாடங்களுக்கு காலை 10 மணி தொடங்கி பிற்பகல் 12.45 வரை தேர்வு நடக்கிறது.
இதற்காக 12 ஆயிரத்து 546 பள்ளிகளில் 3 ஆயிரத்து 731 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 49 ஆயிரம் ஆசிரியர்கள் அறைக் கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முறைகேடுகளைக் கண்காணிக்க 5 ஆயிரத்து 500 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.