தமிழகத்தில் போகிப் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்

தமிழகத்தில் போகிப் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்

தமிழகம் எங்கும் இன்று போகிப் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். பயனற்ற பொருட்களை எரித்ததால், பல இடங்களில் புகைமூட்டமாகக் காணப்பட்டது.

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப,  பொங்கலுக்கு முந்தைய நாள் தமிழகமெங்கும் போகிப் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இந்திரன் முதலியோரை வணங்கி திருப்தி செய்யும் நாள், போகியாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் மார்கழி மாத கடைசி நாளில் போகிப் பண்டிகையை வீடுகள்தோறும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

பொங்கலுக்காக வீட்டை சுத்தம் செய்யும்போது, வீட்டிலிருக்கும் தேவையற்ற பொருட்களை தீயிட்டுக் கொளுத்துவது காலம் காலமாக இருந்து வரும் பழக்கமாக இருந்து வருகிறது.

இதையொட்டி, தமிழகமெங்கும் போகிப் பண்டிகை விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. பயனற்ற பொருட்களை எரித்தும், மேளம் அடித்தும் போகியை வரவேற்றனர்.

இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் விடிந்தபிறகும் புகைமூட்டமாக காணப்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் மெதுவாகவே இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை ஓட்டிச் சென்றனர். புகை மற்றும் பனிமூட்டத்தால் சாலைகளில் நடந்து சென்றவர்கள் அவதிக்குள்ளாகினர்.

பனிமூட்டம் மற்றும் காற்று மாசு காரணமாக போதிய வெளிச்சமின்மையால், பெங்களூரு, புனே, அந்தமான் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 10 விமானங்கள் தாமதமாக தரையிறக்கப்பட்டன.

இதனிடையே, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருள்கள் எரிப்பதை தடுக்க தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது.

சென்னையில் அதிகாரிகள் 30 குழுக்களாக பிரிந்து இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பழைய பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், டயர், டியூப் உள்ளிட்ட ரப்பர் பொருள்கள், காகிதப் பொருள்கள், ரசாயனம் கலந்த பொருள்கள் ஆகியவை எரிக்கப்படுகின்றனவா என்பதை இந்த குழுக்கள் கண்காணித்தன.

இதனிடையே, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், அதிகாலையிலேயே பழைய பொருட்களை எரித்து, பொதுமக்கள் போகி பண்டிகையை கொண்டாடினர். அப்போது சிறுவர்கள் பல்வேறு விதமான மேளதாளங்களை இசைத்து உற்சாகமடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பழைய ஆடைகள், பழைய பாய்கள் மற்றும் தேவையில்லாத பொருட்கள் ஆகியவற்றை பொதுமக்கள் எரித்தனர். மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மேளதாளங்களை இசைத்து, போகி பண்டிகையை கொண்டாடினர்.

விழுப்புரம், விக்கிரவாண்டி, ஒரத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வீடுகளில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஆடைகள் மற்றும் பல்வேறு பொருட்களை, அதிகாலையிலேயே வீடுகளின் முன்பு தீயிட்டு கொளுத்திய பொதுமக்கள், போகி பண்டிகையை கொண்டாடி, பொங்கலை வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *