கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் எதிரொலி: தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்

கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் எதிரொலி: தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்

கேரளத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருவதால் தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் கேரள எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுத் திருப்பி அனுப்பப்படுகின்றன.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 50வயதுக்குட்பட்ட பெண்கள் இருவர் வழிபாடு நடத்தியதைக் கண்டித்துக் கேரளத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்குச் செல்லும் அரசு பேருந்துகளும் தனியார் வாகனங்களும் தமிழக எல்லையான களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டுத் திருப்பி அனுப்பப்படுகின்றன.

கேரளப் பகுதியான பாறசாலையில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் இருந்து கேரளத்துக்குப் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களும் வேலைக்குச் செல்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுவதால் திருநெல்வேலி மாவட்டம் புளியரை வழியாகக் கேரளத்துக்குச் சரக்கு வாகனங்களும் அரசு பேருந்துகளும் இயக்கப்படவில்லை. சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் மட்டும் சென்று வருகின்றன.

புளியரை சோதனைச்சாவடியில் துணைக் கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.கேரளத்தின் பல்வேறு நகரங்களுக்குச் செல்ல வேண்டிய பேருந்துகள் தென்காசியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கேரளாவின் சுற்றுலாத் தலமான மூணாறில் அரசு பேருந்துகளும் தனியார் வாகனங்களும் ஓடவில்லை. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. மதுரை, தேனி,திருநெல்வேலி, ராஜபாளயம், உடுமலை ஆகிய தமிழகப் பகுதிகளிலிருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் தமிழக எல்லைப்பகுதிகளான போடிமெட்டு, கம்பம் மெட்டு, உடுமலை ஆகிய இடங்களிலேயே நிறுத்தப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டன.

இடுக்கி மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சுற்றுலா இடங்களான மாட்டுப்பட்டி, ராஜமலை, குண்டளை எக்கோ பாய்ன்ட் ஆகியவை வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

தேனி மாவட்டம் வழியாகக் கேரளம் செல்லும் வாகனங்கள் கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய தமிழக எல்லைப்பகுதிகள் வரையே இயக்கப்படுகின்றன. தமிழகத்திலிருந்து தோட்டத்தொழிலாளர்கள் யாரும் கேரளத்துக்கு வேலைக்குச் செல்லவில்லை. ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் மட்டும் சென்றுவர அனுமதிக்கப்படுகின்றன.

குமுளியில் ஐயப்ப பக்தர்களுக்காக ஒரு சில கடைகளும் தங்கும் விடுதிகளும் திறந்துள்ளன. சபரிமலைக்குச் செல்லும் அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *