அடுத்த இரண்டு மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டு செயல்படத் துவங்கும் – வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு

அடுத்த இரண்டு மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டு செயல்படத் துவங்கும் என்று அந்நிறுவன சிஇஓ ராம்நாத் கூறியுள்ளார்.

சென்னையில் தாஜ் கன்னிமரா ஐந்து நட்சத்திர விடுதியில் ஸ்டெர்லைட் காப்பர் சிஇஓ ராம்நாத் செய்தியாளர்களை சந்தித்தார். தருண் அகர்வாலா குழு ஸ்டெர்லைட் ஆலையில் விரிவாக ஆய்வு செய்து, பொதுமக்கள், தமிழக அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்டு, அதன் அடிப்படையிலேயே அறிக்கை அளித்ததாகக் கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கை இயற்கை நீதிக்கு எதிரானது என்றும், ஆலையை மீண்டும் திறக்கலாம் என பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆலையைத் திறப்பதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட வாதங்களை பசுமைத் தீர்ப்பாயம் ஏற்கவில்லை எனவும் ராம்நாத் கூறினார். இன்னும் இரண்டு மாதத்தில் ஆலை திறக்கப்பட்டு செயல்படத் துவங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் கொடுத்த அதே நிவாரண தொகையை தாங்களும் தர தயாரக உள்ளதாகவும் ராம்நாத் தெரிவித்தார். ஸ்டெர்லைட்டால் நேரடியாக 4 ஆயிரம் பேரும், மறைமுகமாக 25 ஆயிரம் பேரும் வேலைவாய்ப்பு பெற்றிருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ஆலை இயங்காததால் அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக ராம்நாத் குறிப்பிட்டார்.

அனைத்து மின்சாதனங்களுக்கும் காப்பர் தேவைப்படுகிறது என்றும், காப்பர் இல்லையென்றால் நாட்டில் வளர்ச்சி இல்லை என்றும் அவர் கூறினார். நூறு கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட பள்ளி மற்றும் தரம் வாய்ந்த மருத்துவமனை அமைக்கவுள்ளதாகவும், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 10 லட்சம் மரக்கன்றுகளை நடவுள்ளதாகவும் ராம்நாத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *