தமிழக மாணவர் கிருஷ்ணபிரசாத் மரணம் தொடர்பா நேர்மையான விசாரணை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தமிழக மாணவர் கிருஷ்ணபிரசாத் மரணம் தொடர்பா நேர்மையான விசாரணை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியீட்டுள்ள அறிக்கையில், டெல்லி அருகில் உள்ள சண்டிகரில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பட்டமேற்படிப்பு முதலாமாண்டு பயின்று வந்த ராமேஸ்வரத்தைச் சார்ந்த தமிழக மாணவர் ஆர். கிருஷ்ணபிரசாத் (வயது 24) நேற்றுமுன்தினம் மருத்துவக் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு மரணம் அடைந்த செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அவரது இழப்பால் துயருற்றுள்ள குடும்பத்தாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டில், டெல்லியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த தமிழக மாணவர்கள் இரண்டு பேர் மரணமடைந்த போது தொடக்கத்தில் தற்கொலை என்றே சொல்லப்பட்டது. விசாரணைக்குப் பின் மாணவர் சரவணனின் வழக்கு மர்ம மரணம் என மாற்றப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணபிரசாத்தின் மரணம் சந்தேகத்திற்கு இடமான முறையில் திடீரென விடுதியில் நிகழ்ந்துள்ளது வலுவான சந்தேகத்திற்குரியதாகும். எனவே தமிழக அரசு இதுபோன்ற மரணங்கள் நிகழாது இருக்க உரிய நடவடிக்கைகளை எடுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

சந்தேகத்திற்குரிய விதத்தில் மரணமடைந்துள்ள கிருஷ்ணபிரசாத் மரணம் குறித்து நேர்மையான முறையில் விரிவான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும். கிருஷ்ணபிரசாத் மரணம் தற்செயலானதல்ல என்னும் பட்சத்தில் குற்றமிழைத்தவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுத்திட வேண்டும்.  உயிரிழந்த கிருஷ்ணபிரசாத் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.
தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிபடுத்த தமிழக அரசு அமைத்துள்ள பாதுகாப்புக்குழுவை முறையாக செயல்படுத்த வேண்டுமெனவும், அதே போல், தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை மத்திய அரசும் உறுதி செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *