காஷ்மீர்ச் சிக்கல் தீர்ந்தால் இருநாடுகளின் உறவுகளும் வலுப்படுவதன்மூலம் ஏராளமான பயன்கள் விளையும் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஒரே சிக்கல் காஷ்மீர்தான் என்றும், அந்தச் சிக்கலைப் பேசித் தீர்த்தால் இருநாடுகளிடையான உறவு வலுப்படுவதன்மூலம் ஏராளமான பயன்கள் கிடைக்கும் எனப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இந்திய பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் என்னுமிடத்தில் இருந்து பாகிஸ்தான் பஞ்சாபின் கர்த்தார்ப்பூரில் உள்ள குருத்துவாராவுக்குச் சீக்கியர்கள் சென்றுவரச் சாலை வழித்தடமும் எல்லைச் சாவடியும் அமைக்க இந்தியா இருபதாண்டுகளாகக் கோரி வந்தது.

இந்தக் கோரிக்கையைப் பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டதை அடுத்துத் திங்கட்கிழமை சாலை வழித்தடத்துக்கான அடிக்கல்லைக் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு நாட்டினார். இந்நிலையில் பாகிஸ்தானின் கர்த்தார்ப்பூரில் இன்று நடைபெற்ற விழாவில் பிரதமர் இம்ரான்கான் அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் இந்தியா சார்பில் அமைச்சர்கள் ஹர்தீப்சிங் பூரி, ஹர்சிம்ரத் கவுர் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய இம்ரான்கான், இந்தியா – பாகிஸ்தான் இடையில் உள்ள ஒரே சிக்கல் காஷ்மீர்தான் என்றும், இரு நாட்டின் தலைவர்களும் மனம்வைத்தால் இந்தச் சிக்கலைப் பேசித் தீர்க்க முடியும் என்றும் தெரிவித்தார்.

காஷ்மீர்ச் சிக்கல் தீர்ந்தால் இருநாடுகளின் உறவுகளும் வலுப்படுவதன்மூலம் ஏராளமான பயன்கள் விளையும் எனத் தெரிவித்தார். இந்தச் சாலை வழித்தடம் அமைக்கப்பட்டால் இந்திய எல்லையில் இருந்து 4கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாகிஸ்தானின் கர்த்தார்ப்பூருக்குச் சீக்கிய பக்தர்கள் விசா இன்றிச் சென்றுவர முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *