வெற்றி என்பதை குறிக்கும் வகையில், “ஜெய்” என பெயர் சூட்டிய மோடி

வெற்றி என்பதை குறிக்கும் வகையில், “ஜெய்” என பெயர் சூட்டிய மோடி

அர்ஜெண்டினா தலைநகரில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் பிரதமர் மோடி முதல்முறையாக ஜெய் எனப்படும் முத்தரப்பு பேச்சு நடத்தினார். இதேபோல, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங்குடனும் அவர் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக 3 நாள் பயணமாக பிரதமர் மோடி அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸ் சென்றுள்ளார். அங்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் பிரதமர் மோடி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா ஆகிய 3 நாடுகளின் கூட்டு என்பதையும், வெற்றி என்பதையும் ஒருங்கே குறிக்கும் வகையில், “ஜெய்” என இந்த பேச்சுவார்த்தையை குறிப்பிட்டார். 3 நாடுகளின் கூட்டுறவை குறிக்கும் ஜெய் எனும் இந்த பெயர், இந்தோ-பசிபிக் மண்டலத்தில் அமைதி, வளம், நிலைத்தன்மை ஆகியவற்றை பராமரிக்க உதவும் புதிய கூட்டு என்பதை உலகிற்கு உணர்த்தும் என அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவும், ஜப்பானும் இந்தியாவின் நல்ல நண்பர்கள் எனக் கூறிய பிரதமர் மோடி, மூன்று நாடுகளும் செயலுத்தி அடிப்படையிலான கூட்டாளிகள் என குறிப்பிட்டார். இந்த சந்திப்பின்போது, பிரதமர் மோடி நிறைவேற்றிய பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை டிரம்பும் ஷின்சோ அபேவும் இந்த சந்திப்பின்போது பாராட்டியதாக, வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

இதேபோல, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோருடனும் பிரதமர் மோடி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். ரிக் எனப்படும் ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய 3 நாடுகளின் கூட்டமைப்பு என்ற அடிப்படையில், இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அசாதாரண மாற்றங்களை உலகம் சந்தித்து வரும் அதேசமயம், புவிசார் அரசியல் பதற்றங்களும் சர்வதேச அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துவதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார். உலகஅளவில் சக்திவாய்ந்த நாடுகள் என்ற வகையில், சர்வதேச ஒழுங்கை மதித்து நிலைநிறுத்தும் பொறுப்பு 3 நாடுகளுக்கும் உண்டு என்பதை பிரதமர் மோடி அப்போது வலியுறுத்தியுள்ளார்.

உலக பொருளாதார நிர்வாகத்திலும், தீவிரவாத ஒழிப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரண உதவிப்பணிகளிலும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் மோடி வலியுறுத்தியதாக வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *