பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து ராகுல் காந்தி நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி

பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து ராகுல் காந்தி நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி

ஜம்மு காஷ்மீரின் கத்துவாவில் 8 வயது சிறுமி 5 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் 18 வயது இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும் அமைதியான பேரணி நடத்த இருப்பதாக டிவிட்டரில் ராகுல்காந்தி தெரிவித்திருந்தார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்றும், பல லட்சம் இந்திய மக்களைப் போல் தமக்கும் உள்ளம் கொதிக்கிறது என்றும் தெரிவித்தார். இதையடுத்து மாணவ மாணவிகள், காங்கிரஸ் தொண்டர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தியா கேட் முன்பு திரண்டனர். கைகளில் மெழுகுவர்த்தியுடன் பேரணியாக நடந்துச் சென்றனர்.

பிரியங்கா காந்தி, அவர் கணவர் ராபர்ட் வதேரா, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், சல்மான் குர்ஷித், அம்பிகா சோனி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் இப்பேரணியில் பங்கேற்றனர். அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டதையடுத்து அருகில் இருந்தவர்களை பிரியங்கா முழங்கையால் அடித்து விரட்டினார்.

கத்துவா மற்றும் உன்னாவ் ஆகிய இரண்டு பாலியல் குற்றங்களிலும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி பதாகைகளை ஏந்தி வந்த அவர்கள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். கூட்டத்தில் உரை நிகழ்த்திய ராகுல்காந்தி, இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்றும் வீட்டை விட்டு வெளியே வரவே பெண்கள் அச்சம் கொண்டுள்ளதாக தெரிவித்தார். இப்போராட்டத்தின் காரணமாக இந்தியா கேட் அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *