கடந்த 5 ஆண்டுகளில் மோசமான சாலைகளால் நேரிட்ட விபத்துக்களில் 14,926 பேர் பலி : உச்சநீதிமன்றம்

கடந்த 5 ஆண்டுகளில் மோசமான சாலைகளால் நேரிட்ட விபத்துக்களில் 14,926 பேர் பலி : உச்சநீதிமன்றம்

கடந்த ஐந்து ஆண்டுகளில் மோசமான சாலைகளால் நேரிட்ட விபத்துக்களில் 14,926 பேர் உயிரிழந்தது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாவதற்கு காரணமாக விபத்துகள் அமைகின்றன. இந்த விபத்துகள் ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது மோசமான சாலைகள் தான். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி மதன் பி லோகர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, எல்லையில் நேரிடும் துப்பாக்கி சண்டை, பயங்கரவாதிகளால் முன்னெடுக்கப்படும் சண்டையில் நேரிடும் உயிரிழப்பை விடவும் இந்தியா முழுவதும் குண்டும், குழியுமான சாலைகளால் நேரிடும் விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என்று வேதனை தெரிவித்தார்.

மேலும் 2013 முதல் 2017 வரையில் மோசமான சாலைகள் காரணமாக நேரிட்ட விபத்துக்கள் சாலைகளை பராமரிப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என்பதை காட்டுகிறது என்றும் நீதிபதி குறிப்பிட்டார். இந்தியாவில் குண்டும், குழியுமான சாலைகளில் நேரிடும் விபத்து தொடர்பாக உச்சநீதிமன்றம் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான சாலை பாதுகாப்பு கமிட்டி தாக்கல் செய்துள்ள பதில் தொடர்பாக மத்திய அரசு பதில் அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

மோசமான சாலையினால் உயிரினை இழந்தவர்களுக்கு போதிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும்  சாலைகளை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டிய அதிகாரிகள் அவர்களுடைய பணிகளை செய்யாத காரணத்தினால் இதுபோன்ற உயிரிழப்புக்கள் நேரிடுகிறது என்றும் உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *