2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்காத தமிழக அரசுக்கு கடும் கண்டனம் – தி.வேல்முருகன் அறிக்கை

2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி வழங்காத தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.

கடந்த 2013 ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் (94,000)பேர் (இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்)இதுவரை பணி கிடைக்காமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். அரசு பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களை நிரப்பப்படும் போது ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்த அரசிடம் பல முறை வைக்கப்பட்டது.
நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த ஜனவரி மாதம் இது குறித்த அரசாணை வெளியிடப்படும் என்ற உறுதிமொழி மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்களிடம் இருந்து அளிக்கப்பட்டது. ஆனால் இது வரை செயல்வடிவம் பெறவில்லை என்பது ஏற்கனவே 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை தந்து கொண்டு இருக்கிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலையில் தற்போது 5 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்ட நிலையில் அரசு எந்த முடிவையும் அறிவிக்காத போது தேர்ச்சி பெற்ற 94,000 பேருக்கும் இது மிகுந்த அச்சத்தையும், பெரும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் அரசோ இவ்விஷயத்தில் மிகுந்த அலட்சியத்தோடு இவர்களை கையாளுகிறது. தேர்ச்சி பெற்ற இத்துனை ஆயிரம் பேருக்கும் உரிய பணி கிடைக்காவிட்டால் ஆசிரியர் தகுதித் தேர்வின் நோக்கத்தையே நிர்மூலமாக்குவதாகும்.
எனவே 2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு காலிப்பணியிடங்களில் முன்னுரிமை வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டு அவர்களின் நீண்ட கால போராட்டத்திற்கும் பாதிக்கப்பட்ட 94,000 பேரின் குடும்ப சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது என்பதை இவ்வறிக்கை வாயிலாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக கடும் கண்டனத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *