185 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன ‘விஜயா’ ரோந்து கப்பல்

185 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன ‘விஜயா’ ரோந்து கப்பல்

185 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன ரோந்து கப்பலான ‘விஜயா’  நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

கடலோர காவல்படையை நவீனப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த 2015ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் மூலம் ஓர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

L&T நிறுவனம் கடலோர காவல் படைக்கு அதிநவீன 7 ரோந்து கப்பல்களை வடிவமைத்து கொடுக்கும் ஒப்பந்தத்தை பெற்றது. ‘விக்ரம்’ என்ற முதலாவது கப்பல் கட்டுமானம் முடிந்து கடந்த ஏப்ரல் மாதம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இரண்டாவது கப்பலான விஜயா கடந்த ஜனவரி 20ஆம் தேதி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. தொடர்ந்து 8 மாதங்களாக ஆயுதங்கள் மற்றும் நவீன கருவிகளை இணைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்பணிகள் முழுமையாக முடிவுற்று, இன்று அந்த கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

மத்திய பாதுகாப்பு அமைச்சக செயலர் சஞ்சய் மித்ரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரோந்து கப்பல் விஜயாவை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.கடலோர காவல் படை தலைமை இயக்குனர் ராஜேந்திர சிங், கிழக்கு பிராந்திய ஐ.ஜி பரமேஸ்வரன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ரோந்து கப்பல் விஜயா, மொத்தம் 2 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் எடையும் 98 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்டதாகும். இக்கப்பல் அதிகபட்சமாக மணிக்கு 26 கடல்மைல் வேகத்தில் செல்லக்கூடியது. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் சுமார் 5 ஆயிரம் கடல் மைல் தூரம் பயணிக்கக் கூடியது. கப்பலின் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் ஒரே அறையில் கண்காணிக்கும் வசதி உள்ளது.

ஹெலிக்காப்டர் இறங்கும் வசதி, மாசு கட்டுப்பாட்டு கருவி, கண்காணிப்பு கருவி அதி நவீன ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.கப்பலின் பெரும்பான்மை பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த கப்பலில் ஒரே நேரத்தில் 11 உயர் அதிகாரிகள் உள்பட 102 பேர் பணியில் இருப்பர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *