மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தல் இன்று நடக்கிறது…

மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தல் இன்று நடக்கிறது…

மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், பா.ஜ.க. ஆதரவு ஐக்கிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த பி.ஜே. குரியன் ஓய்வு பெற்றதையடுத்து, கடந்த ஜூன் மாதம் முதல் அந்தப் பதவி காலியாக உள்ளது. அதற்கு தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டார். இத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் ஹரிவன்ஷ், எதிர்க்கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் உறுப்பினர் ஹரிபிரசாத் அறிவிக்கப்பட்டனர். இருவரும் நேற்று தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் வாக்குப்பதிவில் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்குகளை பதிவு செய்வார்கள்.

மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 இடங்களில் ஒரு இடம் காலியாக உள்ளதால், 123 உறுப்பினர்களின் ஆதரவு இருப்போர், துணைத் தலைவராக தேர்வு செய்யப்படுவார். இதில் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. ஹரிவன்ஷுக்கு ஆதரவாக 126 எம்.பி.க்கள் வாக்களிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 91 உறுப்பினர்கள் தவிர, அ.தி.மு.க., தெலங்கானா ராஷ்ட்ர சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், லோக்தளம், பிஜு ஜனதாதளம், சிவசேனா ஆகிய கட்சிகளின் வாக்குகளும் பா.ஜ.க. ஆதரவு வேட்பாளருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ஹரிபிரசாத்துக்கு, காங்கிரஸ் கூட்டணியின் 61 உறுப்பினர்கள் தவிர, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தெலுங்கு தேசம், மார்க்சிஸ்ட், பகுஜன் சமாஜ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்பட 111 எம்.பி.க்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *