மாணவிகளை கொல்லும் கொடிய நீட்டை தமிழகத்தை விட்டு விரட்டி அடிக்க மக்கள் முன்வர வேண்டும் – எம் எச் ஜவாஹிருல்லா

மாணவிகளை கொல்லும் கொடிய நீட்டை தமிழகத்தை விட்டு விரட்டி அடிக்க மக்கள் முன்வர வேண்டும் – எம் எச் ஜவாஹிருல்லா

கடந்த ஆண்டு அனிதா என்ற தாழ்த்தப்பட்ட மாணவியின் உயிரைக் குடித்த நீட் தேர்வு இந்த ஆண்டு பிரதீபா என்ற தாழ்த்தப்பட்ட மாணவியின் உயிரைக் குடித்துள்ளது. மாணவி பிரதீபாவின் மரணத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாநில அரசின் பாடத்திட்டத்தின்படி படிக்கின்ற 98 விழுக்காடு மாணவர்களுக்கு, மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி, மிகச்சிக்கலான வகையில் தேர்வு நடத்தப்பட்டு இதில் வெற்றி பெறுவது மட்டுமின்றி உயர்தர நிலைக்கு வந்தால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கி தமிழக கிராமப்புற, நடுத்தர வர்க்க மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை அடியோடு மறுப்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டமே நீட் திட்டம்.

மாநில உரிமைகளை மத்திய பாஜக அரசிடம் அடகுவைக்கும் வைப்பவர்களின் ஆட்சி தொடங்கிய பிறகு நீட் தேர்வால் உயிரிழப்பு போன்ற அவலம் தொடர்ந்து வருகிறது.

இந்த தேர்வுக்கு தயார் செய்ய, நீட் தேர்வு பயிற்சி மையம் என்ற பெயரில் புற்றீசல் போலக் கிளம்பியிருக்கும் நிறுவனங்களில் இணைந்து பல லட்ச ரூபாய் செலவிட்டு 11ம் வகுப்பிலிருந்தே படிக்கக்கூடிய வாய்ப்பு ஏழை எளிய மாணவர்களுக்கு கிடைக்காது.

இதனையும் மீறி மாணவ மாணவிகள், நீட்க்கு தயாராகி தேர்வு எழுதிய போது படிக்காத பாடத்திலிருந்து கேள்விகளை கேட்டும், தேர்வு மையங்களின் மாணவ செல்வங்கள் மீது பரிசோதனை என்ற பெயரில் நடத்தப்பட்ட அராஜகங்களும் சொல்லில் அடங்காது.

இந்தியாவிலேயே அதிகமான மருத்துவக் கல்லூரிகளை கொண்டுள்ள தமிழகத்தில் தமிழர்களை மருத்துவர்களாக உருவாக்காமல் வட மாநிலத்தவர்களை புகுத்தி, சமூகநீதியை சவக்குழிக்கு தள்ளும் நடவடிக்கைகளில் மத்திய பாஜக அரசு ஈடுப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் இதுபோன்ற அபாயகரமான நடவடிக்கையை ஒட்டுமொத்த தமிழகமும் புறந்தள்ளி முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *