மத்திய பாஜக மோடி அரசுக்கு வலக்கரமாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் அரசும் இருப்பதுதான் வரலாற்றில் கொடூரம்! – தி.வேல்முருகன் அறிக்கை

மத்திய பாஜக மோடி அரசுக்கு வலக்கரமாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் அரசும் இருப்பதுதான் வரலாற்றில் கொடூரம்! – தி.வேல்முருகன் அறிக்கை

காவிரி பிரச்சனையில், தமிழகத்தை, நஞ்சேற்றிக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லுதல் மற்றும் அணு அணுவாய்த் துடிக்கத் துடிக்கச் சாகடித்தலுமே நடக்கிறது என்பதன் சாட்சியம்தான் இந்த வரைவுத் திட்டம்!

இதில் மத்திய பாஜக மோடி அரசுக்கு வலக்கரமாக உச்ச நீதிமன்றமும் இடக்கரமாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் அரசும் இருப்பதுதான் வரலாற்றில் நிகழ்ந்திராத கொடூரம்!

அரசமைப்புச் சட்டத்திற்கும் இயற்கை அறத்திற்குமே எதிரான இந்த பஞ்சமா பாதகம் மற்றும் அதன் பங்காளிகளை இதற்கு மேலும் பொறுக்க முடியுமா என்ற கேள்வியையே தமிழக மக்கள் முன் வைக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

கெடு, கெடு, கெடுவுக்கு மேல் கெடு, கடைசியில் ஒரேயடியாக கெடுத்தேவிட்டது மத்திய பாஜக மோடி அரசு!

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த, அதாவது காவிரி நதிநீர் பங்கீட்டைக் கண்காணிக்க 10 பேர் கொண்ட அமைப்பு! இது காவிரி மேலாண்மை வாரியத்துக்கு இணையான அதிகாரம் படைத்த அமைப்பாக இருக்கும்.

அதில் முழு நேர உறுப்பினர்கள் இருவர்; பகுதி நேர உறுப்பினர்கள் இருவர்; தலா ஒருவர் வீதம் 4 மாநில பிரதிநிதிகள் நால்வர்; மத்திய பிரதிநிதியாக நீர்வளத்துறை செயலர்; அமைப்பின் தலைவராக ஒருவர்; அவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள்; அந்த 5 ஆண்டுகள் என்பது 65 வயது வரை இருக்கலாம்.

மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த காவிரி வரைவுத்திட்டம் இதுதான்.

இதன் விசாரணை வரும் 16ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

கடைசிக் கெடுவான 8ந் தேதியன்றும் மேலும் 10 நாட்கள் கூடுதல் அவகாசம் கோரி, கெடு நீட்டிக்கப்பட்டது.

அப்போது தமிழ்நாடு சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் தமிழகத்திற்கு தண்ணீர் வரவில்லை” என்றார்.

இதற்கு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், “செயல் திட்டத்தால் (ஸ்கீம்) தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது” என்றார்.இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சேகர் நாப்தே, “பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. அதிகாரமற்ற ஒரு அமைப்பையே மத்திய அரசு உருவாக்க முயல்வது தெரியவருகிறது” என்றார்.அதுதான் நடந்திருக்கிறது.

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 16ந் தேதி தமிழகத்திற்கு சாதகமான தீர்வு கிடைக்கும் என்கிறார்; துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரைவுத் திட்டத்தை இன்னும் படிக்கவில்லை என்கிறார்.

உச்ச நீதிமன்றத்தில் ஒவ்வொரு முறையும் பொய்யையே கூறிவந்தது மோடி அரசு. 8ந் தேதியன்று, ”வரைவுத் திட்டம் ரெடி; ஆனால் பிரதமரும் மற்ற அமைச்சர்களும் கர்நாடகத் தேர்தலுக்குச் சென்றுவிட்டதால் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதலைப் பெற முடியவில்லை. அதனாலேயே 10 நாட்கள் அவகாசம் தேவை” என்றது. அதுவும் பச்சைப் பொய்தான் என்பது, அமைச்சரவைக் கூட்டம் நடக்காமலேயே 14ந் தேதி வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து தெரிந்துவிட்டது.

அதேநேரம் உச்ச நீதிமன்றம் விசாரணையை வரும் 16ந் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறதே ஏன்?

15ந் தேதி கர்நாடகத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை; அந்த முடிவை வைத்து அடுத்த முடிவை எடுக்கலாம்.

அதற்காக அடுத்த முடிவு காவிரி மேலாண்மை வாரியமாக மட்டும் நிச்சயம் இருக்காது.

சேகர் நாப்தே அதிர்ச்சியடைந்த அதிகாரமற்ற அமைப்பையேகூட கர்நாடக காங்கிரசும் பாஜகவுமே ஏற்கா! ஏன், மோடிகூட ஏற்பாரா என்ன?

அவரது திட்டமே தனி! அதில் எந்தக் காலத்திலும் காவிரி மேலாண்மை வாரியத்துக்கு இடமில்லை!

அவரைப் பொறுத்தவரை காவிரிப் படுகை கர்நாடகத்திற்கு மட்டும்தான்; தமிழகக் காவிரிப் படுகை, பெட்ரோலிய மண்டலமாக்கப்பட வேண்டும்; அதில் மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஓ.என்.ஜி.சி,ஷேல் இன்னபிற பெட்ரோலியப் பொருட்கள் எடுக்க கார்ப்பொரேட்டுகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

தமிழகக் காவிரிப் படுகையை “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்” என அறிவிக்கச் சொல்கிறோம்; ஆனால் மோடி இதைப் பாலைவனமாக்கி மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஓ.என்.ஜி.சி,ஷேல் எடுக்கும் பெட்ரோலிய மண்டலமாக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் சேர்ந்து திட்டம் (ஸ்கீம்) போட்டிருக்கிறார்.

தீபக் மிஸ்ரா மீது மருத்துவக் கல்லூரி ஊழல் தொடர்பான குற்றச்சாட்டு உள்ளது; ஆனால் அதை விசாரிக்க அவரே நீதிபதிகளை நியமித்துக்கொண்டார்; நம்ம ஆளுநர் பன்வாரிலால் புரொஹித்தைப் போல!

மேலும் அவரை பதவிநீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் தொடர்பான வழக்கிலும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை அவரே அமைத்துக்கொண்டார்.

இப்படி மடியில் கனமும் மனதில் பலகீனமும் உள்ளவர்கள்தானே மோடிக்குத் தேவை! நம்ம ஈபிஎஸ்-ஓபிஎஸ் போல!

அதனால்தான் காவிரி நதிநீர் தாவா விடயத்தில் அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாகவும் இயற்கை அறத்திற்கே எதிராகவும் மோடியின் கட்டபஞ்சாயத்துக்கு வழிவிட்டு நியாய நீதியற்ற ஒரு தீர்ப்பை வழங்கினார் தீபக் மிஸ்ரா!

அதற்கேற்றபடியான வரைவுத் திட்டத்தைத்தான் தாக்கல் செய்திருக்கிறார் மோடி!

இந்த வரைவுத் திட்டம் மேலாண்மை வாரியம் அமைப்பதற்கோ அல்லது அதில் குறிப்பிட்ட 10 பேர் கொண்ட குழு அமைப்பதற்கோகூட அல்ல.

மேலாண்மை வாரியத்தை கர்நாடகம் ஏற்காது; வரைவுத் திட்ட 10 பேர் அமைப்பை தமிழகம் ஏற்காது.

இது மோடிக்கு நன்றாகத் தெரியும்; அவர் எதிர்பார்ப்பதும் அதுதானே? இரு மாநில முரண்பாட்டை வைத்து எதையுமே அமைக்காமல் காவிரி பிரச்சனையை பிரச்சனையாகவே நீடிக்கச் செய்யலாம். அதுசமயம் தான் நினைத்ததுபோல் தமிழக காவிரிப் படுகையை பாலைவனமாக்கி, பெட்ரோலியப் பொருட்கள் எடுக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நம்மைப் பொறுத்தவரை வரைவுத் திட்டம் மட்டுமல்ல; தீபக் மிஸ்ராவின் தீர்ப்பேகூட ஏற்புடையதல்ல; இன்னும் சொல்வதென்றால், நிறைவேற்றக் குறித்திருந்த கெடு என்றோ முடிந்துபோன நிலையில், அந்தத் தீர்ப்பும் அப்போதே செத்துப்போய்விட்டது, அவ்வளவுதான்!

காவிரி பிரச்சனையில் மத்திய மோடி அரசிடமிருந்து எந்தக் காலத்திலும் நாம் நீதியை எதிர்பார்க்க முடியாது; ஏனென்றால் அதற்குத் தகுதியான அரசில்லை அது; சட்டத்தின் ஆட்சியை நடத்தாத, ஜனநாயகத்தை மதிக்காத, பாசிச, சர்வாதிகார, மதவாத, வகுப்புவாத அரசு அது!

ஆகவே நீதியை நாம்தான் நிலைநாட்ட வேண்டும்; அதற்கு மத்திய அரசு தமிழ்நாட்டில் செயல்பட முடியாத நிலையை உருவாக்க வேண்டும்; அதற்குத் தமிழக மக்கள் தயாராக வேண்டும்.

நாம் தெளிவாகச் சொல்கிறோம்; காவிரி பிரச்சனையில், தமிழகத்தை, நஞ்சேற்றிக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லுதல் மற்றும் அணு அணுவாய்த் துடிக்கத் துடிக்கச் சாகடித்தலுமே நடக்கிறது; அதன் சாட்சியம்தான் இந்த வரைவுத் திட்டம்!

இதில் மத்திய பாஜக மோடி அரசுக்கு வலக்கரமாக உச்ச நீதிமன்றமும் இடக்கரமாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் அரசும் இருப்பதுதான் வரலாற்றில் நிகழ்ந்திராத கொடூரம்!

அரசமைப்புச் சட்டத்திற்கும் இயற்கை அறத்திற்குமே எதிரான இந்த பஞ்சமா பாதகம் மற்றும் அதன் பங்காளிகளை இதற்கு மேலும் பொறுக்க முடியுமா என்ற கேள்வியையே தமிழக மக்கள் முன் வைக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *