பேரரிவாளன், கோவை அபுதாஹிர் ஆகியோரின் விடுதலை எப்போது? – தமிமுன் அன்சாரி குமுறல்!

பேரரிவாளன், கோவை அபுதாஹிர் ஆகியோரின் விடுதலை எப்போது?

சட்டசபையில் தமிமுன் அன்சாரி குமுறல்!

சட்டபேரவையில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், சிறைத்துறை மானிய கோரிக்கையின் போது பதிலளித்து பேசிய, மாண்புமிகு அமைச்சர் சி.வி சண்முகம் அவர்களிடம் கேள்வி எழுப்பினார்.

மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே…

10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகளை, M.G.R நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விடுதலை செய்வதாக வாக்களித்து, முதல் கட்டமாக 67 பேரை விடுதலை செய்துள்ளீர்கள். அதற்கு எனது மனமார்ந்த நன்றிகளை மாண்புமிகு அம்மா அவர்களின் அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே சமயம் நீங்கள் கூறக் கூடிய விதிமுறைகளுக்கு உட்பட்ட கோவை அபுதாஹிர், திண்டுக்கல் மீரான் உள்ளிட்ட 28 ஆயுள் தண்டனை கைதிகளின் பட்டியலையும் நான் மாண்புமிகு முதல்வரிடமும், தங்களிடமும், மாண்புமிகு அமைச்சர் திரு.வேலுமணி அவர்களிடமும் கொடுத்துள்ளேன்.

அதுகுறித்து மனிதாபிமானத்துடன் பரீசிலிக்க வேண்டுகிறேன்.

அதுபோல் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் 02-03-16 அன்று மத்திய அரசுக்கு 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி கடிதம் எழுதினார்.

02-03-16 அன்று முன்னாள் முதல்வர் தமிழக அரசு சார்பில் எழுதிய கடிதத்தின் மீது, 3 மாதங்களுக்குள் தனது பதிலை சொல்ல வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு கடந்த 23-01-2018 அன்று உத்தரவிட்டது.

அந்த காலக்கெடு 23-04-2018 அன்றுடன் முடிவடைந்துவிட்டது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து இரு முறை முன்னாள் முதல்வர் முடிவெடுத்துள்ளார்கள்.

ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலையை யாராலும் ஏற்க முடியாது, மிகப்பெரிய துயரம் அது. இந்தியாவில் மதவாத சக்திகள் வளர்வதற்கு அவரது இழப்பும் ஒரு காரணம். வலிமைவாய்ந்த ஒரு பன்னாட்டு செல்வாக்குமிக்க தலைவர் இதுவரை இந்தியாவுக்கு கிடைக்கவில்லை.

இதற்கு தடையாக இருப்பதாக சொல்லப்பட்ட காங்கிரஸ் கட்சியின் நிலைபாடும் மாறியிருக்கிறது. அக்கட்சியின் தலைவர்
ராகுல் காந்தி அவர்கள் சிங்கப்பூரில் கொடுத்த பேட்டியே அதற்கு உதாரணமாகும்.

அன்னை சோனிய காந்தியின் குடும்பமும், இந்த அவையில் உள்ள காங்கிரஸ் நண்பர்களும் அதை எதிர்க்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார். அப்போது அவையில் முதல்வர் எடப்படியார் உள்ளிட்டோர் இருந்தனர்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சி.வி சண்முகம் அவர்கள் சுட்டிக்காட்டிய கைதிகள் விடுதலை குறித்து பரீசிலிக்கப்படும் என்றும், பேரறிவாளனின் விடுதலை உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *