புழல் சிறையில் உயர் பாதுகாப்பு கைதிகளுக்கு சொகுசு வசதிகள் என புகார்

புழல் சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு விதிகளை மீறி படுக்கை, டி.வி., செல்போன், சமையலறை உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாகக் கூறப்படும் விவகாரத்தில் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சொகுசுப் படுக்கை – மின்விசிறி – டி.வி. – டி.வி.டி – நாற்காலிகள்… வண்ண மயமான திரைச்சிலைகள், சலவை செய்த உடைகள், உயர் ரக ஷூ மற்றும் கூலிங் கிளாஸ்…

 

புழல் மத்திய சிறை வளாகத்தில் விசாரணைக் கைதிகளுக்கான சிறை, தண்டனைக் கைதிகளுக்கான சிறை என இரு சிறைகள் உள்ளன. தண்டனைக் கைதிகளுக்கான சிறையில் உயர் பாதுகாப்புப் பிரிவு என சிறப்புப் பிரிவு ஒன்று உள்ளது. இதில் கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்கள் கொல்கத்தாவில் இருந்து கள்ள நோட்டு, கள்ளத்துப்பாக்கி கடத்தி வந்த நபர், மதத் தலைவர்கள் கொலை வழக்கில் கைதானவர்கள்உள்ளிட்ட தீவிரக் குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட கைதிகள் உள்ளனர்.

சிறை வளாகம் முழுவதும் சர்வசாதாரணமாக செல்ஃபோன் பயன்படுத்தும் கைதிகள் அச்சமின்றி செல்ஃபியும் எடுத்துக்கொள்கின்றனர். சிறைக்கு வரும் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு நடுவில் வைத்து அதிகாரிகள் துணையுடன் இவர்களுக்கு செல்ஃபோன்கள் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளிலும் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் அதையும் மீறி இவர்கள் செல்ஃபோன்களை பயன்படுத்துவது குறித்த கேள்வி எழுந்தது? சிறைகளில் பொருத்தப்பட்டுள்ள ஜாமர் கருவிகள் 3 ஜி வகை போன்களை மட்டுமே கட்டுபடுத்தும் திறனுடையவை என்றும் 4 ஜி வகை போன்களை அவற்றால் கட்டுப்படுத்த முடியாது என்றும் தெரியவந்துள்ளது.

விதிகளை மீறி லஞ்சம் பெற்றுக்கொண்டு இவர்களை சொகுசு வாழ்க்கைக்கு அனுமதித்த சிறைத்துறை அதிகாரிகள் யார் என விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்ட சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா கைதிகளின் சொகுசு வாழக்கை தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டதாகவும், 7 செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *