பாடகி சின்மயி வைரமுத்து மீது கூறியுள்ள புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் – தமிழிசை

பாடகி சின்மயி பாடல் ஆசிரியர் வைரமுத்து மீது கூறியுள்ள புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.தனக்கு 17 வயது இருக்கும் போது வைரமுத்து அலுவலகத்திற்கு சென்று இருந்ததாகவும் அப்போது வைரமுத்து தன்னை கட்டி அணைத்து தவறாக நடக்க முயன்றதாகவும் சின்மயி புகார் கூறியிருந்தார்.

வைரமுத்துவிடம் இருந்து தப்பிக்க தனது காலணிகளை கூட எடுக்காமல் வீட்டிற்கு ஓடியதாகவும் சின்மயி அந்த புகாரில் தெரிவித்திருந்தார். மேலும் சுவிட்சர்லாந்திற்கு இசை நிகழ்ச்சிக்கு சென்று இருந்த போது வைரமுத்து தங்கியிருந்த ஓட்டல் ரூமுக்கு தனியாக செல்லுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாகவும் சின்மயி குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள வைரமுத்து, தன் மீது அநாகரீகமான அவதூறு பரப்பப்படுவதாக விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் சின்மயிக்கு ஆதரவாக பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்துகளை பதிவிட்டுள்ளார்.  பாடகி சின்மயியின் புகார்கள் கவனிக்கப்பட வேண்டியது என்று தமிழிசை தெரிவித்துள்ளார். மேலும் சின்மயி கூறும் புகார்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசியல்வாதிகளை விமர்சனம் செய்யும் திரைத்துறையினர் பாடகி சின்மயி விவகாரத்தில் அமைதியாக இருப்பது ஏன் என்றும் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *