சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்றது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில சுயாட்சி மாநாடு ; ஆளுநர் பதவி இருக்கக்கூடாது உள்ளிட்ட 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

தமிழகத்தில் மதவாத கட்சி வளராமல் தடுக்க திமுக வலிமையாக இருக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில சுயாட்சி மாநாடு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மத்தியில் உண்மையான கூட்டாட்சியை நிறுவவும், மாநிலங்களில் சுயாட்சி நிர்வாகத்தை உருவாக்கவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும், அனைத்து ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், கேரள முதலமைச்சர் பிரனாய் விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில், அனைத்து தலைவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசாக புத்தகங்களை வழங்கி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கவுரவித்தார்.

இந்த மாநாட்டில், மத்திய – மாநில அரசு உறவுகளை ஆய்வுசெய்ய ஆணையம் அமைக்க வேண்டும், கல்வி தொடர்பான அதிகாரங்களை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும், இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையை திணிக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும், பேரவை, நாடாளுமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முயற்சிகளை கைவிட வேண்டும், மாநிலங்களுக்கு பொருளாதார தற்சார்பு நிலையை உருவாக்க வேண்டும், நிதி நிர்வாக அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும், மாநிலங்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும், இந்தி, சமஸ்கிருத திணிப்பை கைவிட்டு தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும், ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் தொண்டர்களின் ஆரவாரத்தோடு நிறைவேற்றப்பட்டன.

பின்னர், திருமாகுறள் என்ற புத்தகத்தை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட புத்தகத்தை திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி பெற்றுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து, மாநாட்டில் எழுச்சியுரையாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக மக்களை சாதிய, மதவாத சக்திகளிடமிருந்து காப்பாற்றுவதற்குதான் இந்த மாநாட்டை நடத்துவதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் மதவாத கட்சி வளராமல் தடுக்க திமுக வலிமையாக இருக்க வேண்டும் என்றும் அதோடு கூட்டணி கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என உணர்த்துவதற்காகத்தான் இந்த மாநாட்டை நடத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *