சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பது குறித்து சி.பி.ஐ.க்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பது குறித்து சி.பி.ஐ.க்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பது குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு, சி.பி.ஐ.க்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகக் கோவில்களில் சிலைகள் திருட்டுப் போனது குறித்து சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றித் தமிழக அரசு ஆணை வெளியிட்டது. இதை எதிர்த்து, வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றுவதன்மூலம், யாரையோ காப்பாற்ற அரசு முயற்சிப்பதாகவும், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதில் உள்நோக்கம் இருப்பதால், அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரினார். ஆனால், இது அரசின் கொள்கை முடிவு என்றும், போலீஸ் விசாரணையில் இருக்கும் வழக்குகளையும், புதிய வழக்குகளையுமே சி.பி.ஐ. விசாரிக்கும் என்றும் தமிழக அரசு கூறியது.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றியது தொடர்பான ஆவணங்கள் மற்றும் விளக்கங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் கேட்டதாகவும், அவை அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலை கடத்தல் வழக்குகளை மாற்றம் செய்தது தொடர்பான ஆவணங்கள் சி.பி.ஐ. இணை இயக்குநர் அலுவலகத்துக்கு தமிழக அரசு அனுப்பியதாகவும், அவை டெல்லி சி.பி.ஐ. இணை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பது குறித்த நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவிக்குமாறு உத்தரவிட்டனர். வழக்கு மாற்றம் குறித்த ஆவணங்களை தமிழக அரசும் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க மறுத்தால் என்ன செய்வீர்கள் என்றும் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், சிலை கடத்தல் சம்பவத்தில், தமிழகத்தின் எல்லை தாண்டி மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள், வெளிநாட்டினர்கள் தொடர்பு இருப்பதால், தமிழக போலீசார் விசாரிப்பதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வாதிட்டார். இதையடுத்து, விசாரணையை வரும் 24ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதையடுத்து, புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவிலில் மரகதக்கல் சிலை மாயமானது குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரிய வழக்கும் விசாரணைக்கு வந்தது. அதற்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *