சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களை நீக்கவும் உத்தரவு!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அளித்த புகாரைத் தொடர்ந்து செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம் (NBSA) வெளியிட்ட முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவில் பாப்புலர் ஃப்ரண்ட் குறித்து அவதூறான செய்திகளை வெளியிட்ட ரிபப்ளிக் டிவி, டைம்ஸ் நவ், இந்தியா டுடே, ஆஜ் தக் ஆகிய நான்கு செய்தி சேனல்களுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அந்த உத்தரவில் சேனல்கள் இது தொடர்பான செய்திகளை தங்களது இணையதளங்கள், யூ-ட்யூப் மற்றும் இதர இணைப்புகளிலிருந்து நீக்குமாறும் தெரிவித்துள்ளது. இந்த ஒளிபரப்பாளர்கள் தவறான தகவல்களை செய்திகளாக வெளிட்டுள்ளனர், இது நெறிமுறைகள் மற்றும் ஒளிபரப்பு நியமங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள், செய்தி அறிக்கைகளில் குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை கடைப்பிடித்தல், நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செய்தி அறிக்கைகளுக்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் விதிகளை மீறுவதாக செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம்(NBSA) கண்டறிந்துள்ளது.

ஓய்வுப் பெற்ற நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் செய்தி ஒளிபரப்பாளர்கள் அசோசியேஷனுக்கு அளித்த உத்தரவில், இந்த உத்தரவை அவர்களது இணையதளம் மற்றும் வருடாந்திர அறிக்கையில் வெளியிடுமாறும், இந்த உத்தரவின் நகல்களை சேனல்கள், செய்தி ஒளிபரப்பாளர்கள் அசோசியேஷனின் தலைவர், ஆசிரியர்கள் மற்றும் இதர உறுப்பினர்களுக்கு அனுப்புமாறும், ஊடகங்களில் வெளியிடுமாறும் தெரிவித்துள்ளது. முன்னதாக சட்டம் மற்றும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு இயங்கும் அமைப்பை பல்வேறு ஊடக நிறுவனங்கள் ஊடக விசாரணைகள் மூலம் வேண்டுமென்றே பார்வையாளர்களை தவறாக வழி நடத்தும் விதமாக இழிவாக சித்தரித்து செய்திகளை வெளியிட்டது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா NBSA வில் புகார் அளித்திருந்தது.

இந்தியா டுடே மற்றும் ஆஜ்தக்கில் வெளியான செய்திகள் தொடர்பாக கடந்த 2017 டிசம்பர் 5-ஆம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் எம். முஹம்மது அலி ஜின்னா மற்றும் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் தேசிய தலைவர் ஏ.எஸ்.சைனபா ஆகியோர் அளித்த புகாரை ‘செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம்’ (NBSA) கவனத்தில் எடுத்துக்கொண்டது. கேரளாவில் மத மாற்றம் செய்யும் நிறுவனம் இயங்குவதாக குற்றம் சாட்டி நடத்தப்பட்ட ஒரு ‘ஸ்டிங் ஆபரேசனுக்கு’ எதிராக இந்த புகார் அளிக்கப்பட்டது. அமைப்பிற்கு கெடுதல் விளைவிக்கும் நோக்கத்துடன் கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளரை பாப்புலர் ஃப்ரண்டின் நிறுவன உறுப்பினர் என்று தவறாக சித்தரித்து அவரிடம் எடுத்த நேர்காணலை சேனல் ஒளிபரப்பியதாக எம்.முஹம்மது அலி ஜின்னா புகார் அளித்திருந்தார். ஒவ்வொரு தரப்பினரும் சமர்ப்பித்த பதிவுகளை ஆய்வுச் செய்த பிறகு மாண்புமிகு நீதிபதி அவர்கள் தெளிவுப்படுத்தியிருப்பது என்னவென்றால், நீதிமன்றம் அல்லது திறமையான அதிகாரிகளிடமிருந்து அத்தகைய கண்டுபிடிப்புகள் இல்லாத நிலையில் சேனல்கள் பயன்படுத்திய `லவ் ஜிஹாத் கா ஸாஹெர்` `தேஷ் துரோகி` ஆகிய விளக்கங்கள் செய்தி ஒளிபரப்பு தரநிலை மையத்தின்(NBSA) நெறிமுறை சட்டத்தை மீறிய செயலாகும்.

அக்டோபர் 7 மற்றும் நவம்பர் 5, 2017 ஆகிய தினங்களில் டைம்ஸ் நவ் `BanPFI’ என்ற ஹேஷ்டேக்குடனும், பிப்ரவரி 7, 2018 அன்று ரிபப்ளிக் டிவி `BanPFI’ என்ற ஹேஷ்டேக்குடனும் ஒளிபரப்பிய நிகழ்ச்சிக்கு எதிராகவும் பாப்புலர் ஃப்ரண்ட் ‘செய்தி ஒளிபரப்பு தரநிலை மையத்தில்’ (NBSA) புகார்களை அளித்திருந்தது. டைம்ஸ் நவ் மற்றும் ரிபப்ளிக் டி.வியின் ஒளிபரப்பில் உடன்படாத ‘செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம்’ (NBSA), குற்றச்சாட்டு மட்டுமே உள்ளதே தவிர எந்த நீதிமன்றமும் பாப்புலர் ஃப்ரண்டை வெறுப்பு அமைப்பு என்றோ அல்லது அரசு அதனை தீவிரவாத இயக்கம் என்றோ அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்பு என்றோ கூறவில்லை என்பதை கண்டறிந்தது. ‘செய்தி ஒளிபரப்பு தரநிலை மையத்தின்’ (NBSA) பார்வையில் ஒளிபரப்பாளர் ‘செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம்’ (NBSA) மற்றும் ‘செய்தி ஒளிபரப்பாளர் அசோசியேஷனின்’ (NBA) நடுநிலைமை, பாரபட்சமற்ற தன்மை, நேர்மை மற்றும் நீதிமன்றத்தில் உள்ள அல்லது விசாரணையில் உள்ள விஷயங்களை பேணுவதன் அவசியம் தொடர்பான வழிகாட்டுதல்களை மீறியுள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விசாரணை நிலுவையில் உள்ள / புலனாய்வில் இருக்கும் விஷயங்களை குறித்த செய்திகளை வெளியிடும்போது ஒளிபரப்பாளர்கள் மிகுந்த கவனத்துடன் கையாளவேண்டும் என்றும் இந்த செய்திகள் தொடர்பான ஆட்சேபனைக்குரிய ஹேஷ்டேக்குகள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்றும் NBSA எச்சரித்துள்ளது. இதன் மூலம் ஒளிபரப்பாளர் தனிநபர் / அமைப்புக்குறித்த ஊடக விசாரணையில் ஈடுபட்டு பாரபட்சமான முறையில் செய்திகளை வெளியிட்டுள்ளார். டைம்ஸ் நவ் வெளியிட்ட இது சம்பந்தமான நிகழ்ச்சியின் வீடியோ பதிவேற்றப்பட்ட அதன் வலைத்தளம், யூ – ட்யூப் அல்லது வேறு ஏதேனும் இணையதளம் அல்லது வேறு ஏதேனும் இணைப்புகள் ஆகியவற்றிலிருந்து உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் அதனை NBSA விடம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது. இது தவிர பாப்புலர் ஃப்ரண்டின் “கட்டாய மதமாற்றம்” சம்பந்தமாக எடுக்கப்பட்ட ஸ்டிங் ஆபரேஷன் வீடியோவை தங்களிடம் சமர்ப்பிக்குமாறு இந்தியா டுடேவுக்கு NBSA கட்டளையிட்டுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கத்திற்கு எதிராக அவதூறு செய்தி பரப்பியது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தாக்கல் செய்த புகார் குறித்து ‘செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம்’ (News Broadcasting Standards Authority – NBSA) ரிபப்ளிக் டிவி, டைம்ஸ் நவ், இந்தியா டுடே மற்றும் ஆஜ் தக் போன்ற செய்தி சேனல்களை எச்சரித்துள்ளதை பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய செயலக குழு கூட்டம் வரவேற்றுள்ளது. இந்த உத்தரவு ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை பிரிவினர் மற்றும் அவர்களது இயக்கங்களுக்கு எதிராக இந்தியாவில் நியாயமற்ற, மிகவும் பாரபட்சமான பரப்புரையில் ஈடுபட்டு வரும் இந்த சேனல்களுக்கு கிடைத்த அடியாகும். இந்த சேனல்கள் NBSA ஆல் வழங்கப்பட்ட உத்தரவுகளுக்கு இணங்கும் என்று மத்திய செயலகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *