உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை திங்கட்கிழமை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

உள்ளாட்சித் தேர்தலுக்கான கால அட்டவணையை ஆகஸ்டு ஆறாம் தேதி தாக்கல் செய்யத் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்துக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில் 2017பிப்ரவரி 21ஆம் தேதி உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில் மே 15க்குள் தேர்தலை நடத்தி முடிக்கக் கெடு விதித்தது.

அதன்பின்னர் 2017செப்டம்பர் மூன்றாம் தேதி அளித்த உத்தரவில் நவம்பர் 17ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைச் செயல்படுத்தாத மாநிலத் தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரித் திமுக சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு ((இன்று)) தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் மத்திய அரசு அளிக்க வேண்டிய நாலாயிரம் கோடி ரூபாய் நிதி முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இரு முறை உத்தரவிட்டும் அதை மாநிலத் தேர்தல் ஆணையம் நிறைவேற்றாதது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் எனவும் அவர் வாதிட்டார்.

இதையடுத்து உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளதா என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நெடுஞ்செழியன் வழக்கு உள்ளது எனத் தெரிவித்தார். திமுக வழக்கறிஞர் வில்சன், உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் தேர்தல் நடத்தத் தடையில்லை எனத் தெரிவித்தார். எந்தத் தடையும் இல்லாத நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

விசாரணையை ஆகஸ்டு ஆறாம் தேதிக்குத் தள்ளி வைத்ததுடன் அன்றே உள்ளாட்சித் தேர்தலுக்கான கால அட்டவணையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர். இதுவே இறுதி வாய்ப்பாகும் என்றும் மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *