இந்தியாவின் தங்கை மங்கை ஹிமா தாஸ் ! 400 மீட்டரில் சாதித்தார்

20 வயதுக்குட்பட்டோர் உலக தடகள சாம்பியன் போட்டியில் இந்தியாவின் ஹிமா தாஸ் 400 மீட்டர் இறுதிப் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

பின்லாந்தின் டாம்பியர் நகரில் உலக தடகள சாம்பியன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நேற்று நடந்த 400 மீட்டர் அரையிறுதி தகுதிச் சுற்றில் 52.10 வினாடிகளில் கடந்து இறுதிக்கு ஹிமா  முன்னேறினார். தொடக்க சுற்றுகளில் 52.25 வினாடிகளில் ஹிமா தாஸ் கடந்திருந்தார். இவர் படிப்படியாக முன்னேறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்நிலையில் இன்று 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்துக்கான இறுதிப் போட்டி நடந்தது. இதில் பந்தய தூரத்தை 51.46 நொடிகளில் கடந்து தங்கம் வென்றார் 18 வயதேயான ஹிமா தாஸ்.

ஹிமா தாஸ்க்கு அடுத்தப்படியாக ரொமானியா நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரியா மிக்லோஸ் வெள்ளியையையும், அமெரிக்காவின் டெய்லர் மேன்சன் வெண்கலத்தையும் வென்றனர். அஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமா தாஸ் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று 6 ஆம் இடத்தை பிடித்தவர். இம்முறை அவர் அபார திறமையை வெளிப்படுத்தியது அனைவரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது. ஹிமா தாஸ் தங்கம் வென்றதன் மூலமாக 20 வயதுக்குட்பட்டோர் உலக தடகள போட்டியில் தங்கம் வென்ற இந்தியப் பெண் என்று சாதனைக்கு சொந்தக்காரரானார்.

இந்தியாவின் பெருமை ஹிமா தாஸ் என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய பதிவில் “400 மீட்டரில் தங்கம் வென்றதன் மூலம் வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். ஹிமா தாஸ்க்கு என் வாழ்த்துகள். அவரின் இந்தச் சாதனை இந்தியாவில் மேலும் பல மகத்தான தடகள வீரர்களை உருவாக வாய்ப்பாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

இந்தி நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் ” தங்கம் வென்றதன் மூலம் எங்களின் தலையை நிமிர வைத்தாய் ஹிமா தாஸ், வாழ்த்துகள் ஜெய் ஹிந்த்” என உணர்ச்சிப் பூர்வமாக பதிவி்டடுள்ளார். இவர்களைத் தவரி மத்திய அமைச்சர்கள் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக், மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோர் பலரும் அவருக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *