அறக்கட்டளைக்கு முறைகேடாக நன்கொடை பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பல லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கலிதா ஜியா, அவரது மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் உதவியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு டாக்கா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் மறுவிசாரணைக்கு உத்தரவிட கோரி கலிதா ஜியா சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால், மறு விசாரணைக்கு உத்தரவிட முகாந்திரம் இல்லை என கூறிய உயர்நீதிமன்றம், கலிதா ஜியாவின் மனுவை தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றமும் இந்த தீர்ப்பை உறுதி செய்ததையடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஜியா அறக்கட்டளைக்கு முறைகேடாக 2.5 லட்சம் டாலர்கள் நன்கொடை பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் கலிதா ஜியா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*