அண்ணா பல்கலைக் கழகத் தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் 10 பேர்மீது வழக்குப்பதிவு…

அண்ணா பல்கலைக் கழகத் தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் 10 பேர்மீது வழக்குப்பதிவு…

அண்ணா பல்கலை தேர்வில் முறைகேடு நடந்ததாக பல்கலைக்கழக பேராசிரியை உமா உட்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறுகூட்டலில் லஞ்சம் பெற்றுக் கொண்டு கூடுதல் மதிப்பெண் வழங்கி முறைகேடு செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 565 அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடந்த பருவத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் சுமார் 3 லட்சம் பேர் மறுக் கூட்டலுக்காக விண்ணப்பித்தனர். மறுக்கூட்டலில் 73 ஆயிரம் மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே விடைத்தாள் திருத்திய குழுவை மாற்றி, புதிதாக பேராசிரியர் குழுவை அமைத்து மதிப்பெண் மறுமதிப்பீடு செய்யப்பட்டது. இதற்கு முன்பு விடைத்தாள் திருத்திய பேராசிரியர்கள் மெத்தனமாகச் செயல்பட்டதாக ஆயிரத்து 70 பேராசிரியர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு விடைத்தாள்கள் திருத்தம் செய்ய தடை விதித்து அப்போதைய அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா உத்தரவிட்டார். தற்போது அதே பேராசிரியர் உமா தான் இந்த முறைகேட்டில் மூளையாக செயல்பட்டதாக லஞ்ச ஒழிப்பு பிரிவின் வழக்கில் சிக்கியுள்ளார்.

மறுக்கூட்டலுக்கு இவரால் நியமிக்கப்பட்ட உதவி பேராசிரியர்கள் விஜயக்குமார், சிவக்குமார் மற்றும் விடைத்தாள் மதிப்பீடு செய்தவர்கள் என மொத்தம் 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூடுதல் மதிப்பெண் வழங்க மாணவர் ஒருவருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றதாகவும், போலியான விடைத்தாள் தயாரித்து மோசடி செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளராக பேராசிரியர் உமா கடந்த 2015-ம் ஆண்டில்  இருந்து 2018- மார்ச் மாதம் வரை செயல்பட்டு வந்தார்.

இந்த காலகட்டத்தில் அதிகத் தேர்ச்சி பெறும் டாப் 20 கல்லூரிகள் பட்டியலில் இடம் பிடிப்பதற்காக போட்டிபோடும் கல்லூரி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, லஞ்சம் பெற்று கொண்டு செயல்பட்டதாகவும், பேராசிரியை உமா மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து தான் கடந்த மார்ச் மாதம் இடமாற்றம் செய்யப்பட்ட பேராசிரியை உமா,  அண்ணா பல்கலைகழகத்தின் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை பேராசிரியராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் மதிப்பெண் முறைகேட்டில் லஞ்சம் பெற்ற வழக்கில் சிக்கியுள்ளதால் பணியிடை நீக்கம் செய்யப்படவுள்ளார்.

இதனிடையே, கோட்டூர்புரத்தில் உமாவின் வீடு, திண்டிவனத்தில் உதவிப் பேராசிரியர்கள் விஜயகுமார், சிவகுமார் ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், தேர்வுத்தாள் மதிப்பீடு செய்ததில் உள்ள குறைபாடுகள் தொடர்பான ஆவணங்களும், அசையா சொத்துக்கள் வாங்கியதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *