ஃபோர்பஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் 10-வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார்.

நாட்டில் உள்ள முதல் 100 பணக்காரர்களின் பட்டியலை நிகர சொத்து மதிப்பின் அடிப்படையில் வரிசைப்படுத்தி போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகள் தீவிரமடைந்த சூழலிலும், கடந்தாண்டை விட இந்தாண்டு, முதல் 100 பெரும்செல்வந்தர்களின் சொத்து மதிப்பு 26 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில், இரண்டரை லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி 10ஆம் ஆண்டாக, இந்தாண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்தாண்டை விட இந்தாண்டு, இவரது சொத்து மதிப்பு 67 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. கடந்தாண்டு நான்காம் இடத்தில் இருந்த விப்ரோ நிறுவன அதிபர் அசீம் பிரேம்ஜி, இந்தாண்டு, ஒரு லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார். அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் ஹிந்துஜா சகோதரர்கள், ஒரு லட்சத்து 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுடன், மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்தவரும், HCL நிறுவனத்தின் உரிமையாளருமான ஷிவ் நாடார், 88 ஆயிரத்து 383 கோடி ரூபாய் சொத்துக்களுடன் 7ஆம் இடத்தில் உள்ளார். அதானி குழுமங்களின் தலைவர் கவுதம் அதானி, 72 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுடன், 11ஆம் இடத்தில் உள்ளார். யோகா குரு பாபா ராம்தேவ்-ஐ நிறுவனராக கொண்டுள்ள பதஞ்சலி நிறுவனத்தின் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, 42 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் 19ஆம் இடம் பிடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *