மாணவி மரணத்திற்கு காரணமான பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சென்னை ஐஐடியில் எம்.ஏ. சமூகவியலாளர் துறையில் முதலாம் ஆண்டு படித்து வந்த, கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப், கடந்த வாரம் ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள சரயு பெண்கள் விடுதியில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த தற்கொலைக்கு அவர் குறைவான மதிப்பெண் பெற்ற காரணத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், படிப்பில் எப்போதும் முதலிடம் பிடிக்கும் பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கோழையல்ல என்றும், ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் முதலிடம் பெற்று அவர் ஐ.ஐ.டி.யில் சேர்ந்ததாகவும் மாணவியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். ஆகவே, தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் மாணவி தனது மரணத்திற்கு காரணம் சமூக அறிவியல் துறையை சேர்ந்த பேராசிரியர்கள் சுதர்ஷன் பத்மநாபன், ஹேமச்சந்திரன் கரா, மிலிந்த் பிராமே உள்ளிட்ட பேராசிரியர்கள் தான் காரணம் என்று தனது மொபைலில் குறிப்பெழுதி வைத்துள்ளதாகவும், அதனை காவல்துறை வெளியிட மறுப்பதாகவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் சுதர்ஷன் பத்மநாபன் எப்போதும் சிறுபான்மை விரோத போக்குடன் தன்னை மனரீதியாக துன்புறுத்துவதாகவும், ஒவ்வொரு தேர்விலும் முதலிடம் வகிக்கும் முஸ்லிம் பெயர்கள் மீது சுதர்ஷன் பத்மநாபன் உள்ளிட்ட பேராசிரியர்கள் சிலர் வெறுப்படைவதாகவும், தனது முஸ்லிம் பெயர் தான் ஐ.ஐ.டி.யில் தனக்கு பிரச்சினை என்றும் தெரிவித்ததாகவும், அதன் காரணமாகவே தான் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களால் மனரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாவதாக மாணவி பாத்திமா லத்தீப் தன்னிடம் முன்னர் தெரிவித்ததாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து வந்த நிலையில், தற்போது சிறுபான்மை விரோத போக்கும் குடிகொண்டுள்ளது மாணவி பாத்திமா லத்தீபின் மரணம் உணர்த்துகின்றது.

மாணவி பாத்திமா லத்தீபின் மரணத்திற்கு காரணமாக கூறப்படும் பேராசிரியர்கள் சுதர்ஷன் பத்மநாபன், ஹேமச்சந்திரன் கரா, மிலிந்த் பிராம் உள்ளிட்ட பேராசிரியர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.

நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களின் தற்கொலை மரணங்களை தடுத்து நிறுத்தும் வகையில், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி வளாகங்களில் மேற்கொள்ளப்படும் பாரபட்சமான போக்குகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை, தலித் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

மாணவி பாத்திமா லத்தீப் மரணத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருடன் இணைந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியும் நீதிக்காக குரல் கொடுக்கும் என்பதையும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *